LATEST NEWS
மலையைப் பார்த்து நாய் குரைப்பதா..? முதல்வர் விஜய்யின் ‘கொத்து பரோட்டா’ பேச்சால் கடுப்பான திமுக… ஆர்.எஸ். பாரதி ஆவேசப் பதிலடி..!!!
தமிழகத்தில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே அரசியல் மோதல் வார்த்தைப் போராக மாறி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரை வளர்ச்சித் திட்டங்கள் இன்றி “கொத்து பரோட்டா” போலப் பிய்த்துப் போட்டு நாசமாக்கிவிட்டனர் என்று விமர்சித்திருந்தார். விஜய்யின் இந்த விமர்சனத்திற்கு திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தற்பொழுது மிகக் கடுமையான மற்றும் ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்யின் பேச்சு அரசியல் நாகரிகமற்றது என்று சாடினார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஐந்து முறை எம்.எல்.ஏ-வாகவும், சென்னை மேயராகவும், துணை முதல்வராகவும், முதல்வராகவும் இருந்து கொளத்தூர் தொகுதிக்குச் செய்துள்ள எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் உலகறிந்தது என்று அவர் குறிப்பிட்டார். வரலாறே தெரியாமல் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் “கொத்து பரோட்டா” என்று கீழ்த்தரமான மொழியில் பேசுவது தகுமா என்று ஆர்.எஸ். பாரதி கொந்தளித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து தவெக அரசின் மீது குதிரை பேர அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஆர்.எஸ். பாரதி, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததே இதற்கு அப்பட்டமான சான்று என்றார். மேலும், திமுகவிலிருந்து விலகியவர்களை ‘எச்சில் இலைகள்’ என்று குறிப்பிட்ட அவர், அவர்களை தவெக குதிரை பேரத்தின் மூலம் தங்களுக்குள் சேர்த்துக் கொள்வதாகச் சாடினார். மலையைப் பார்த்து நாய் குரைப்பதால் மலைக்கு எந்தச் சேதாரமும் வந்துவிடாது” என்று விஜய்யை மிகக் காரசாரமான வார்த்தைகளால் ஆர்.எஸ். பாரதி சாடினார்.கரூர் கோயில் நிலங்கள் தொடர்பான விஜய்யின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்த அவர், தவெகவின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகவும், வரவிருக்கும் இடைத்தேர்தலில் மக்கள் இதற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
