LATEST NEWS
“தடங்கல்களை உடைப்போம்!.. புதிய தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் விடுத்த அதிரடி எச்சரிக்கை.. அனல் பறக்கும் அரசியல் களம்..!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், தொடர்ந்து வெளிப்பட்டு வரும் தமிழர்களின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளைப் பாதுகாப்பதில் தங்களின் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். கீழடி, பொருநை மற்றும் இரும்பின் தொன்மை போன்ற அகழாய்வு முடிவுகள் தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு நிரூபித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய தடங்கல்கள் வந்தாலும் வரலாற்று உண்மைகளை நிறுவுவோம் என சூளுரைத்துள்ளார். மேலும், தமிழர்களின் பெருமைமிக்க வரலாற்றையும் பண்பாட்டையும் குறைத்து மதிப்பிட்டும், சிதைத்தும், திரிபுவாதங்களால் திசைதிருப்பவும் சூழ்ச்சிகள் நடக்கும் இக்காலத்தில், உண்மைச் சான்றுகள் வெளிவருவது மிக முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்!#DravidianModel அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும்.
தமிழரின் வரலாற்றையும் நமது… https://t.co/oyAVHQAP9E— M.K.Stalin (@mkstalin) July 14, 2026
இதற்கு முன்னதாக ‘திராவிட மாடல்’ அரசு தொடங்கிய இந்த அகழாய்வுப் பணிகளைப் புதிய அரசும் தொய்வின்றித் தொடர்ந்து மேற்கொண்டு, தமிழர் வரலாற்றுத் தடங்களை உலகறியச் செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மண்ணுக்குள்ளும் ஆழ்கடலுக்குள்ளும் மறைந்து கிடக்கும் இன்னும் பல கீழடிகளை வெளிக்கொண்டு வருவதன் மூலம், இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கிலிருந்து தொடங்கி எழுதுவோம் என்ற தனது இலக்கை அவர் மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். தமிழர்கள் தங்களின் வரலாற்றில் பெருமிதம் கொள்வதோடு, வரும் காலங்களில் புதிய வரலாற்றைப் படைத்திடவும் பலம் பெற வேண்டும் என்று தனது பதிவின் மூலம் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
