LATEST NEWS
“மேடம் சொல்றபடிதான் நடப்பேன்!”.. பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிய அமைச்சர்.. கோட்டை வட்டாரத்தில் மிரள வைத்த சம்பவம்..!!
தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையில் கூடுதல் தலைமைச் செயலாளராக சுப்ரியா சாகு ஐஏஎஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமான அரசியல் நடைமுறைகளைக் கடந்து, அத்துறை சார்ந்த முடிவுகளில் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அமைச்சர் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகத் தலைமைச் செயலகத்தில் பேச்சு நிலவுகிறது. ஆட்சி மாற்றங்கள் மற்றும் அரசியல் சூழல்களுக்கு ஏற்பப் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், சர்வதேச அளவில் உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இவரை மாற்றுவது என்பது மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எளிதான காரியம் அல்ல என்ற விவாதம் தற்போது அரசு வட்டத்தில் பலமாக எழுந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக, சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வனத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் வருவதற்கு முன்பே, “நான் கொடுக்கும் அறிவுறுத்தலின்படிதான் அனைத்தும் நடக்கும், அமைச்சரும் அதையேதான் பின்பற்றுவார்” என்று அவர் கீழ்நிலை அதிகாரிகளிடம் துணிச்சலாகத் தெரிவித்துள்ளார். அவர் சொன்னபடியே, சற்று நேரம் கழித்து அங்கு வந்த வனத்துறை அமைச்சரும், “மேடம் சொல்வதைக் கேட்டு, அதன் வழியிலேயே நடங்கள்” என்று கூறிவிட்டு ஒட்டுமொத்தக் கூட்டத்தையும் அவரிடமே ஒப்படைத்துள்ளார். அரசியல்வாதிகளை ஆட்டிப் படைக்கும் நிர்வாகத் திறமையால் துறையைத் தன் வசப்படுத்தியுள்ள இந்த ஐஏஎஸ் அதிகாரியின் பாணி, தற்போது அரசு அதிகாரிகள் மத்தியில் ட்ரெண்டிங்கான பேசுபொருளாக மாறியுள்ளது.
