LATEST NEWS
“கரூரில் துரும்பு அசைந்தால் தவெக அரசு காலி!”.. டெல்லி பவரை காட்டி முதல்வர் விஜயை மிரட்டும் இ.பி.எஸ்.. பரபரக்கும் தமிழக அரசியல்..!!
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரசியல் கட்சித் தாவல்களுக்கு மத்தியில், சேலம் சூரமங்கலத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக அரசை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தின் மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்ற தங்களது எம்.எல்.ஏ-க்களை தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு தன் வசம் இழுத்து வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், ஒரிஜினல் களவாணி தவெகதான் என்று மிக ஆக்ரோஷமாகச் சாடியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடித் தாக்குதல் தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே தற்போது புதிய அரசியல் போரை மூட்டியுள்ளது. மேலும், அதிமுகவிலிருந்து தவெகவுக்குத் தாவியவர்கள் அங்கு நடுத்தெருவில் நிற்பதாகவும், அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு வந்தால் ஜீரோவில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ள அவர், டெல்லி மேலிடம் தலையிட்டு தகுதி நீக்க மனுக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்துள்ளார்.
கட்சியிலிருந்து மேலும் எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவதைத் தடுக்க இபிஎஸ் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ரகசியமாகத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதன் பின்னணியிலேயே இடைத்தேர்தல் அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஒன்றிய அரசு தற்போது தவெக அரசை விளையாட விட்டு வேடிக்கை பார்க்கிறது என்று குறிப்பிட்ட இபிஎஸ், கரூர் குதிரை பேர வழக்கில் 2 போலீஸ் ஐஜிக்கள் தலைமையில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடந்து வருவதை நினைவுபடுத்தியுள்ளார். இந்த வழக்கில் சிபிஐ யாராவது ஒருவரைத் தூக்கினால் தவெக ஆட்சி தானாகவே ஆட்டம் கண்டுவிடும் என்றும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் கட்சிக்கும் நேர்ந்த கதிதான் இங்கும் விஜய்யின் தவெகவிற்கு ஏற்படும் என்றும் அவர் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
