CRIME
“சார், என் மனைவியைக் கொன்னு கார்ல வச்சிருக்கேன்..!” போலீசாரையே அதிர வைத்த கணவனின் வாக்குமூலம்… பின்னணியில் இருந்த பகீர் காரணம்..!!!
மகாராஷ்டிராவின் வாஷிம் மாவட்டத்தில் உள்ள சம்ருத்தி விரைவுச்சாலையில் கார் ஒன்றில் ஒரு குடும்பம் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த சல்மான் கான் என்ற நபர், மகாராஷ்டிராவில் தங்கியிருந்து தனது மனைவி ஹசீன் பானு மற்றும் மூன்று குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். பயணத்தின் போது தம்பதியினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சல்மான் கான், காரில் இருந்த இரும்பு கம்பியால் மனைவியை தாக்கியதுடன், தனது மூன்று பிஞ்சு குழந்தைகளின் கண் முன்னாடியே மனைவியின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
மனைவியைக் கொலை செய்த பிறகும் சல்மான் கானுக்கு எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லை. அவர் காரை நிறுத்தாமல், உயிரிழந்த மனைவியின் உடலை இருக்கையிலேயே போட்டுவிட்டு, வாஷிம் மாவட்டத்தின் கரஞ்சா நகரச் சாலைகளில் பல மணி நேரம் காரை ஓட்டிச் சுற்றித் திரிந்துள்ளார். காரில் இருந்த மூன்று குழந்தைகளும் பயந்து நடுங்கியபடி தங்களது தாயின் உடலருகே அமர்ந்திருந்தனர். பல மணி நேரம் சுற்றிய பிறகு, சல்மான் கான் நேராக கரஞ்சா காவல் நிலையத்திற்குச் சென்று, காரில் தனது மனைவியின் சடலம் இருப்பதாகவும், அவரைத் தானே கொலை செய்ததாகவும் போலீசாரிடம் கூறி சரணடைந்தார்.
விசாரணையில், சல்மான் கானுக்குத் தனது மனைவி ஹசீன் பானுவின் நடத்தையின் மீது கடுமையான சந்தேகம் இருந்து வந்ததே இந்த கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இந்த சந்தேகத்தால் இருவருக்கும் இடையே வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாஷிம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிகேஷ் காட்மோடே உத்தரவின் பேரில், காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதன்மைக் குற்றவாளியான சல்மான் கானைக் கைது செய்த போலீசார், இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை நேரில் பார்த்துக் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மூன்று குழந்தைகளிடமும் ஆலோசகர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
