CRIME
திண்ணையில் குடித்த கணவன்… துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி …! கோவையில் நள்ளிரவில் அரங்கேறிய பகீர் சம்பவம்..!!!
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளி ரமேஷ். இவருக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததால், இவரது மனைவி சசி பிரியாவுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 10-ம் தேதி நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மது அருந்திய ரமேஷ், மேலும் குடிக்கப் பணம் கேட்டு சசி பிரியாவைச் சரமாரியாக அடித்துத் துன்புறுத்தியுள்ளார். கணவரின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் ஆத்திரமடைந்த சசி பிரியா, தனது துப்பட்டாவால் ரமேஷின் கழுத்தை இறுக்கியும், வாய் மற்றும் மூக்கைப் பொத்தியும் கீழே தள்ளியுள்ளார். இதில் அருகில் இருந்த கட்டிலில் விழுந்த ரமேஷ் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் இறந்ததை மறைக்க முயன்ற சசி பிரியா, ரமேஷின் அண்ணன் கார்த்திகேயனுக்குப் போன் செய்து, கணவருக்கு உடம்பு சரியில்லை என்று கூறி வரவழைத்துள்ளார். அங்கு அசைவற்று கிடந்த ரமேஷை கார்த்திகேயன் மூக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு ரமேஷின் கழுத்து மற்றும் முகத்தில் கீறல்கள் இருந்ததைக் கண்ட மருத்துவர், அவரை மேல் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ஆனால், அங்கு ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதியளித்தனர். இது குறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தினமும் குடிக்கப் பணம் கேட்டு சித்ரவதை செய்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கணவனைக் கொலை செய்ததாகச் சசி பிரியா ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சந்தேக மரணம் என்று பதிவு செய்யப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சசி பிரியா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வறுமையிலும் உழைப்பிலும் வாழ வேண்டிய ஒரு நெசவாளர் குடும்பம், இந்த மது அரக்கனின் பிடியால் ஒட்டுமொத்தமாகச் சீரழிந்துள்ள சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
