CRIME
“‘என் உடலை அவர்கள் தொடக் கூடாது”… மெஹந்தியால் மரண தீர்ப்பு எழுதிய மருமகள்.. மாமியார் குடும்பத்திற்கு பெண் வைத்த ‘செக்’.. திடுக்கிடும் பின்னணி..!!
மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், 32 வயதான பிரீதி வர்மா என்ற திருமணமான பெண், தன் கணவர் மற்றும் மாமியார் குடும்பத்தினரின் கடுமையான உடல் மற்றும் மன ரீதியான கொடுமைகள் தாங்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தான் அனுபவித்த சித்திரவதைகளை காகிதத்தில் எழுதினால் அதை அழித்துவிடுவார்கள் என்று பயந்த அவர், அவற்றை அழித்துவிட முடியாதபடி தன் கைகளிலும் கால்களிலும் மெஹந்தியால் எழுதி வைத்துள்ளார். “என் உடலை அவர்கள் தொட அனுமதிக்காதீர்கள்” என்றும், ஐந்து பேர் கொண்ட தன் மாமியார் குடும்பத்தினர் தன்னை மாமியாரும் மைத்துனர்களும் சேர்ந்து கொடூரமாக நடத்தியதாகவும் அவர் தன் மரண சாசனமாக மெஹந்தியில் பதிவிட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து, பிரீதியின் உடலில் எழுதப்பட்டிருந்த மெஹந்தி வாசகங்களை முதன்மை ஆதாரமாகக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெண் தன் மரண வலியையும் வேதனையையும் காகிதத்தில் எழுதாமல், மெஹந்தி மூலம் உடலிலேயே எழுதிச் செல்ல வேண்டியிருந்த இந்த அவலம், வெறும் தற்கொலை மட்டுமல்ல; இது ஒட்டுமொத்த சமூகத்தின் மற்றும் அமைப்பின் தோல்வியைக் காட்டுகிறது. திருமணத்தின் பெயரால் பெண்கள் அனுபவிக்கும் இத்தகைய கொடுமைகளும் மரணங்களும் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்ற சமூகக் கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
