LATEST NEWS
நீங்க ஏன் இந்த போராட்டத்தில் இறங்குகிறீங்க.? இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம் தம்பி.. ஆதவ் அர்ஜுனா சொன்ன விஷயம்.. உண்மையை உடைத்த தெருக்குரல் அறிவு…!!
சென்னையில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாடகர் தெருக்குரல் அறிவு, நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். சமமற்ற ஒரு சமூகத்தில் அனைவருக்கும் சமமான பொதுத்தேர்வு என்பது சாத்தியமற்றது என்று குறிப்பிட்ட அவர், டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது வன்முறையை ஏவி காயப்படுத்தும் அரசின் போக்கை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், வினாத்தாள் கசிவைக் கண்டித்து நாடு முழுவதும் போராடி வரும் கரப்பான் பூச்சி கட்சியினரின் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவையும் அவர் மேடையில் வெளிப்படுத்தினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தின் முன்பு தான் நடத்திய போராட்டத்தின் போது, தன்னை உள்ளே அழைத்துச் சென்று பேசிய விவகாரம் குறித்தும் அவர் மேடையில் பகிர்ந்துகொண்டார். அப்போது தான் முதலமைச்சரைச் சந்திக்கவில்லை என்றும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத்தான் சந்தித்தேன் என்றும் அறிவு தெளிவுபடுத்தினார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்று கூறிய அமைச்சர், “நீங்கள் ஏன் இந்த போராட்டத்தில் இறங்குகிறீர்கள்? இது உங்களுக்கு தேவையில்லாத விஷயம்” என்று கூறி தன்னை அனுப்பி வைத்ததாகத் தெருக்குரல் அறிவு குற்றம் சாட்டினார்.
அரசிடம் மனுக்களை அளிப்பதன் மூலமோ அல்லது முதலமைச்சரைச் சந்திப்பதன் மூலமோ மட்டும் நீட் போன்ற பெரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது என்பதைத் தான் உணர்ந்துள்ளதாக அவர் கூறினார். நீட் தேர்வு மட்டுமன்றி, புதிய கல்விக் கொள்கையையும் முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், இது ஒட்டுமொத்த மக்களும் கையில் எடுத்துப் போராட வேண்டிய ஒரு களம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். நாம் அம்பேத்கரின் பேரப்பிள்ளைகள் என்பதால் மக்கள் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், போராடும் மாணவர்களின் கரங்களே நாட்டின் எதிர்காலம் என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.
