LATEST NEWS
“அடேங்கப்பா..! 5 அடி முதலையை அசால்ட்டாக தோளில் சுமந்து சென்று… மாஸ் காட்டிய பீகார் விவசாயி..! வைரல் வீடியோ..!!”
பீகார் மாநிலம் சுபௌல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாயிகள் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது பயிர்களுக்கு இடையே சுமார் 5 அடி நீளமுள்ள முதலை ஒன்று மறைந்திருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். வயலில் முதலை இருப்பதை அறிந்து அங்கு ஏராளமான கிராம மக்கள் திரண்டனர். இருப்பினும், அவர்கள் முதலையைத் துன்புறுத்தாமல், யாருக்கும் காயம் ஏற்படாத வகையிலும் வனவிலங்கிற்குப் பாதிப்பு இல்லாத வகையிலும் அதனைப் பாதுகாப்பாகப் பிடிக்கத் திட்டமிட்டனர்.
அப்போது, அமித் குமார் என்ற விவசாயி மற்ற கிராம மக்களின் உதவியுடன் முதலையை கவனமாகக் கட்டுப்படுத்தினார். பாதுகாப்புக்காக அதன் வாயைக் கயிற்றால் கட்டிய பிறகு, அதனை வனத்துறைக்குக் கொண்டு செல்ல உடனடியாக வாகன வசதி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சிறிதும் தயங்காத அமித் குமார், அந்த 5 அடி நீள முதலையைத் தனது தோளில் சுமந்துகொண்டு வனத்துறை அலுவலகத்தை நோக்கிப் நடந்து சென்றார்.
அவர் வனத்துறை அலுவலகத்தைச் சென்றடைந்தபோது அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால் முதலையை அங்கே விட்டுவிடாமல், மேலும் நடந்து சென்று பீம்நகர் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தார். பின்னர் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு முதலை அவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. ஒரு நபர் முதலையைத் தோளில் சுமந்து செல்லும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதுடன், அந்த விவசாயியின் துணிச்சலையும் விவேகத்தையும் நெட்டிசன்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
