LATEST NEWS
“என் தம்பி உயிருடன் இருக்கிறானா..? எல்லையில் புகைப்படங்களோடு தவிக்கும் பெற்றோர்..! வதந்தியை நம்பி உயிரைப் பணயம் வைத்த மொரோக்கோ இளைஞர்கள்..!!”
மொரோக்கோவின் ஃபினிடெக் நகரில் உள்ள குடும்பத்தினர், ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியுட்டா பகுதிக்கு எல்லை கடந்து நீந்திச் செல்ல முயன்று காணாமற்போன தங்கள் அன்பிற்குரியவர்களைப் பற்றிய தகவல்களை அறிய முடியாமல் தவித்து வருகின்றனர். எல்லை வேலிக்கருகே கூடிய பெற்றோர், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டோரிடம் தங்களது உறவினர்களின் புகைப்படங்களைக் காட்டிச் செய்திகளைப் பெற முயன்றனர். கடந்த சில நாள்களில் 60,000-க்கும் மேற்பட்டோர் சியுட்டாவைச் சென்றடைந்தபோதிலும், அவர்களுள் பெரும்பாலானோர் ஃபினிடெக் நகருக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பேருந்துகள் மூலம் தங்களது குடும்பத்தினரிடம் கொண்டுசேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 72 மரணங்கள் பதிவாகியுள்ளதாக ஸ்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இறந்தோரின் எண்ணிக்கை 130-ஐ நெருங்குவதாகவும் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் மனித உரிமைகளுக்கான மொரோக்கோ சங்கம் தெரிவித்தது. ஃபினிடெக்கிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் விவசாயியாகப் பணியாற்றும் அப்தெல்லாதீஃப் என்பவர், சியுட்டாவுக்கு நீந்திச் செல்ல முயன்ற தம் 17 வயதுத் தம்பியின் நிலை குறித்துக் கவலையுறுகிறார். நீந்தும்போது தசைப்பிடிப்பு ஏற்பட்டுத் தம்பி பிரிந்துவிட்டதாக அவருடன் சென்ற நண்பர்கள் கூறிய நிலையில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்று குடும்பத்தினர் தவிக்கின்றனர்.
ஸ்பானிய எல்லை திறக்கப்படும் என்று சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளே இளையர்களின் இந்தப் பெருந்திரளான பயணத்திற்குக் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், சட்டவிரோதக் குடியேற்றத்தின் ஆபத்துகள் குறித்தும் சமூக ஊடகப் பொய்ச் செய்திகள் குறித்தும் இளைஞர்களிடம் மொரோக்கோ அரசு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறிவிட்டதாக அப்தெல்லாதீஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
