LATEST NEWS
“அடக்கொடுமையே..! டிவி சேனலை மாத்தினது ஒரு குத்தமா… ரிமோட்டை தொட்ட பாவத்துக்கு கணவனுக்கு விழுந்த அரிவாள் வெட்டு..! போபாலில் நடந்த பகீர் சம்பவம்..!!”
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் உள்ள சோலா மந்திர் காவல் எல்லைக்குட்பட்ட நகர் நிகம் காலனியில், டிவி சேனலை மாற்றுவது தொடர்பான எளிய குடும்பத் தகராறில் மனைவி தன் கணவனை அரிவாளால் தாக்கி காயப்படுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விதிஷாவைச் சேர்ந்த 32 வயதான ராகேஷ் அகிர்வார் என்ற கூலித்தொழிலாளி தன் மனைவி ராமமணி அகிர்வாரோடு வசித்து வருகிறார். ஜூலை 31 அன்று இரவு சுமார் 10:30 மணியளவில், சாப்பிட்டுவிட்டு போதையில் டிவி பார்த்துக்கொண்டிருந்த ராகேஷின் கையில் இருந்த ரிமோட் பொத்தான் தவறுதலாக அழுத்தப்பட்டு டிவி சேனல் மாறியுள்ளது.
சேனல் மாறியதும் டிவி பாழாகிவிடும் என்று கூறி ராமமணி கோபமடைந்தார். இதற்கு ராகேஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கெட்ட வார்த்தை பேசுவதிலும் பரஸ்பர மோதலிலும் முடிந்தது. அப்போது ஆத்திரமடைந்த ராமமணி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து ராகேஷின் தலை மற்றும் கன்னத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ராகேஷிற்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த வீட்டின் உரிமையாளர் இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.
காயமடைந்த ராகேஷ் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்க முயன்றபோது, அவரது மனைவி அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும், ராகேஷ் சோலா மந்திர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்துப் பேசிய காவல் நிலைய அதிகாரி சரஸ்வதி திவாரி, இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், சம்பவத்தின் போது கணவர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவித்தார். தற்காப்புக்காகவே மனைவி தாக்கினார் எனக்கூறப்படும் நிலையில், தப்போது காவல்துறை வழக்குப் பதிவு செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது.
