LATEST NEWS
எங்க முதலமைச்சர் விஜய்க்குப் பணம் ஒரு விஷயமே கிடையாது.. வரலாற்றிலேயே முதல் முறையாகச் சாதி, மதம், பணம் இல்லாம… மேடையில் அதிரடி காட்டிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!
தமிழக பட்ஜெட்டில் இளைஞர்களுக்கான பல புதிய மற்றும் அதிரடி அறிவிப்புகள் இடம் பெறும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், கடந்த கால ஆட்சிகளில் கொண்டு வரப்பட்ட பட்ஜெட்டுகள் அனைத்தும் பழையவற்றின் நகலாகவே இருந்தன என்றும், ஆனால் வரவிருக்கும் பட்ஜெட் தமிழக வரலாற்றில் முற்றிலும் புதியதொரு பட்ஜெட்டாக இருக்கும் என்றும் உறுதியளித்துள்ளார். தமிழகத்தின் எதிர்காலம் இளைஞர்கள் தான் என்பதில் முதலமைச்சர் விஜய் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளதால், அவர்களை மையப்படுத்தியே இந்த நிதிநிலை அறிக்கை தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் மாற்றம் குறித்துப் பேசிய அமைச்சர், “எங்கள் முதலமைச்சர் விஜய்க்குப் பணம் ஒரு பொருட்டே அல்ல, இந்தியாவின் மிக அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தவர், மக்கள் சேவைக்காக அதைத் தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார்” என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாகச் சாதி, மதம், பணம் ஆகியவற்றின் ஆதிக்கமின்றி மக்கள் தங்களுக்கு வாக்களித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர்களாகிய தாங்கள் தேர்தலுக்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் தங்களது கூட்டணியே தொடர்ந்து ஆட்சி அமைக்கும் என்றும், தங்களுக்கு எதிராக தற்போதைக்கு யாரும் இல்லை என்பதால் கொளத்தூரிலேயே பழைய அரசியல் வரலாற்றை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த கால ஆட்சியில் நிலவிய ‘கட்சி நிதி’ என்ற பெயரிலான லஞ்ச கலாச்சாரத்தையும், ஊழலையும் தங்களது அரசு முற்றிலும் ஒழித்துக்கட்டியுள்ளதாக ஆதவ் அர்ஜுனா சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலற்ற புதிய தமிழ்நாட்டைத் தாங்கள் உருவாக்கி வருவதால், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தாராளமாகத் தமிழகத்திற்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். தொழில் தொடங்குவதற்கும் முதலீடுகள் செய்வதற்கும் தங்களது அரசு முழு ஒத்துழைப்பையும், பாதுகாப்பையும் வழங்கும் என்றும் அவர் அந்த மேடையில் உறுதியளித்துள்ளார்.
