CINEMA
“பழியை போட்டுட்டு ஓடுறவர் லீடரே இல்லை…! இதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை…” பிக்பாஸில் விஜய்யை மறைமுகமாக சாடினாரா விஜய் சேதுபதி..?!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் பத்தாவது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் விஜய் சேதுபதி இந்த முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். மொத்தம் 19 போட்டியாளர்கள் இந்த சீசனில் விளையாடுவதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற நிலையில், பிளாக் பாண்டி உடல்நிலை காரணத்தால் வீட்டை விட்டு வெளியேறியதால் போட்டியாளர்களின் எண்ணிக்கை 18ஆகக் குறைந்திருக்கிறது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சாத்திகாவிடம் விஜய் சேதுபதி பேசுகையில், போட்டியாளர்கள் அனைவரிடமும் ஜனநாயகம் என்றால் என்ன, தலைவர் என்றால் யார் என அவரவர் கருத்தைக் கேட்டார். மேலும் சாத்திகாவின் வாக்குறுதிகளையும் படித்துக் காண்பித்தார்.
அதனையடுத்து பேசிய விஜய் சேதுபதி, “லீடர்னா என்னவென்று தெரியாமல் லீடர்ஷிப் என்றால் என்னவென்று தெரியாமல்; வாய்க்கு வந்த மாதிரி வாக்குறுதிகளை அள்ளி கொடுத்துவிட்டு; பிரச்னையும் பொறுப்பும் வரும்போது எதிரணி மேல் பழியை தூக்கி போட்டுவிட்டு, அங்கிருந்து தெறித்து ஓடுவது லீடருக்கான தகுதி இல்லை. அதெல்லாம் ஏமாற்று வேலை” என்று பேசினார். இதைப் பார்த்த பலரும், விஜய்யை மனதில் வைத்துதான் விஜய் சேதுபதி இவ்வாறு மறைமுகமாக விமர்சித்துள்ளார் என சோஷியல் மீடியாவில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
