LATEST NEWS
“ராஜினாமா செய்தால் மந்திரி பதவி” தவெகவுக்கு ஆள் பிடிக்க வைகோ வீட்டில் நடந்த ரகசிய பேரம்..? திமுக MLA-க்கள் பகீர்..!!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் கூட்டணி அமைப்பதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தங்களை விற்க முயன்றதாக திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற எம்.எல்.ஏ-க்களான டி.எம். ராஜேந்திரன் மற்றும் ஆர். செந்தில் செல்வன் ஆகியோர் குற்றம்சாட்டியுள்ளனர். தங்களை தவெக கூட்டணிக்கு இழுக்க ‘குதிரை பேரம்’ பேசப்பட்டதாகக் கூறி, அவர்கள் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி வைகோவின் இல்லத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்தப் பேச்சுவார்த்தையில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளரும் தற்போதைய அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பங்கேற்றுள்ளார். தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக கூட்டணியின் கீழ் இடைத்தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், அதன் பிறகு இருவரில் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் தேர்தல் செலவுகள் முழுவதையும் தவெகவே ஏற்கும் என்றும் ஆதவ் அர்ஜுனா ஆசைவார்த்தை கூறியதாக எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடான சதித் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, வைகோ மற்றும் துரை வைகோ ஆகியோரே காரணம் என திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் ஐ. பரந்தாமன் செய்தியாளர்களிடம் விமர்சித்துள்ளார். ஊழலை ஒழிப்பதாகக் கூறும் தவெக அரசின் நிஜ முகம் இதுதான் என்றும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய்யை முதல் குற்றவாளியாகச் சேர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தியுள்ளதால் தமிழக அரசியலில் இந்த விவகாரம் மேலும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது
