LATEST NEWS
“எளிமை வேஷம்” உங்க MLA-க்கள் ஏழைகளா..? MLA கனிமொழி கிட்ட மட்டும் எத்தனை கார் இருக்கு தெரியுமா..? வெளியான பெரிய லிஸ்ட்.. பரபரப்பில் அரசியல் களம்..!!
சட்டப்பேரவை விதி 110-ன் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதிப் பணிகளுக்காக அரசு சார்பில் புதிய கார்களும், மாதம் ₹75,000 பராமரிப்புப் படிகளும் வழங்கப்படும் என்ற முதல்வர் விஜய்யின் அறிவிப்பு, பேரவையில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அரசின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக உறுப்பினர்கள் இந்த அரசு கார்களை ஏற்க மறுத்தனர். இதற்குப் பதிலளித்த ஆளுங்கட்சியான த.வெ.க-வின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எளிய பின்னணியில் இருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் தொகுதிப் பணியாற்றுவதை உறுதி செய்யவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், த.வெ.க-வின் 35 எம்.எல்.ஏ-க்களிடம் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் பேரவையில் வாதிட்டார்.
எனினும், த.வெ.க. எம்.எல்.ஏ-க்கள் பலரிடம் ஏற்கனவே ஆடம்பர வாகனங்கள் இருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. மொத்தமுள்ள 107 த.வெ.க எம்.எல்.ஏ-க்களில் 72 பேரிடம் சொந்த கார்கள் உள்ள நிலையில், கிட்டத்தட்ட 40 பேர் தலா 2 கார்களையும், 6 பேர் 5-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் வைத்துள்ளனர். குறிப்பாக, கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷின் தேர்தல் பிரமாணப் பத்திரத் தரவுகளின்படி அவரிடம் மட்டும் 14 வாகனங்கள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கனிமொழி எம்.எல்.ஏ-வின் பெயரில் மஹிந்திரா மராசோ, ஜீப் தார் LX, எர்டிகா, XUV 700, அர்பன் குரூஸர் ஹைரைடர், ஃபார்ச்சூனர் மற்றும் ஈச்சர், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட பல வர்த்தக/சரக்கு வாகனங்கள் உட்பட 14 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல, அவரது கணவர் பெயரில் கைனெடிக் இ-லூனா, எர்டிகா, ஜீப் தார், XUV 700, ஃபார்ச்சூனர், மஹிந்திரா ஜீட்டோ மற்றும் வர்த்தக வாகனங்கள் என 12 வாகனங்கள் என இருவரும் இணைந்து மொத்தம் 26 வாகனங்களைச் சொந்தமாக வைத்துள்ளனர்.
எளிய எம்.எல்.ஏ-க்களின் தொகுதிச் சேவைக்காகவே அரசு செலவில் புதிய கார்கள் வழங்கப்படுவதாக ஆளுங்கட்சித் தரப்பில் நியாயப்படுத்தப்பட்ட நிலையில், சொந்தமாக 26 வாகனங்கள் வரை வைத்துள்ள வசதி படைத்த உறுப்பினர்கள் கட்சிக்குள் இருக்கும் சூழல் வெளிப்பட்டுள்ளது. இத்தகவல்களை அ.தி.மு.க நிர்வாகி தனபால் ஆறுமுகம் தனது முகநூலில் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து, அரசின் இந்த வாகன விநியோகத் திட்டம் குறித்த விமர்சனங்களும் காரசார விவாதங்களும் அரசியல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் தீவிரமடைந்துள்ளன.
