LATEST NEWS
ஒரு வார்த்தை கூட ஒழுங்கா வரல… இங்கிலீஷை இப்படியா கொலை பண்றது..? எம்.எல்.ஏ-வின் வீடியோ பார்த்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!
சமீபத்தில் பாகிஸ்தானில் இருந்து இணையத்தில் வெளியான ஒரு வீடியோ மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாண சட்டசபை உறுப்பினரான முகமது ஷபீர் குரேஷி, முகமது அலி ஜின்னாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகச் சட்டமன்றத்தில் உரையாற்றத் தொடங்கினார். அவரின் கையில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரு தீர்மான உரை இருந்தது. ஆனால், அதை வாசிக்கத் தொடங்கிய போது அவரின் நாக்கு ஒவ்வொரு வார்த்தைக்கும் தடுமாறி நின்றுபோனது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “ஆங்கிலத்தை இப்படியா கொலை செய்வார்கள்” என்று கிண்டலடித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
கராச்சியின் கேமாரியைச் சேர்ந்த இந்தச் சட்டமன்ற உறுப்பினர், ஜின்னாவின் புகழைப் பாடி உரை நிகழ்த்த வேண்டிய சூழலில், அவர் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியதும் நடந்த சம்பவங்கள் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தன. ஆங்கிலத்தில் இருந்த ஒவ்வொரு வார்த்தையையும் உச்சரிக்க அவர் மிகவும் கஷ்டப்பட்டார். நிலைமை கைமீறிப் போகவே, அருகில் இருந்த சக சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் ஆங்கிலத்தில் பேசாமல், ஏதோ கடினமான ரகசியக் குறியீட்டைப் படித்துப் புரிந்துகொள்ள முயல்வது போல் காட்சி அளித்தார்.
இந்த வீடியோ வெளியானதுமே சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவியத் தொடங்கின. லண்டனில் சட்டம் பயின்ற திறமையான வழக்கறிஞரான ஜின்னாவின் ஆங்கிலப் புலமையைக் குறிப்பிட்டுப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ‘இதையெல்லாம் பார்த்தால் ஜின்னாவே நேரில் வந்து உருதுவிலேயே பேசியிருக்கலாமே என்று புலம்புவார்’ என நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர். ஆங்கிலம் வராதபோது எதற்காகக் கட்டாயப்படுத்தி ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்றும், ஊழியர்கள் அவருக்கு முன்பே பயிற்சி அளித்திருக்கலாம் அல்லது உருதுவில் எழுதிக் கொடுத்திருக்கலாம் என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
