CRIME
கணவனின் கள்ளக்காதலி கொலை… 5 வருடம் கழித்து சிக்கிய குற்றவாளி மனைவி… சேலம் சூட்கேஸ் கொலை வழக்கில் வங்கதேசப் பெண் சிக்கியது எப்படி..?
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேசப் பெண் தேஜ்மண்டல் கொலை வழக்கில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய திருப்பமாக நிஷி என்ற பெண் குற்றவாளியைப் போலீசார் புனேவில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் அழகு நிலையம் நடத்திவிட்டு பின்னர் சேலத்தில் மசாஜ் சென்டர் நடத்தி வந்த தேஜ்மண்டல், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அழுகிய சடலமாக சூட்கேஸிற்குள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
போலீசாரின் விசாரணையில், தேஜ்மண்டலிடம் வேலை பார்த்து வந்த நிஷி மற்றும் அவரது கணவர் லப்லு ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதமே இந்தக் கொலைக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. லப்லுவுக்கும் தேஜ்மண்டலுக்கும் இடையே இருந்த தவறான உறவு, சம்பளப் பிரச்சினை மற்றும் நகை, பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் நிஷி, லப்லு உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து தேஜ்மண்டலின் வாயைக் கட்டி மூச்சுத்திணறச் செய்துகொலை செய்துவிட்டு உடலை சூட்கேஸில் அடைத்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
கொலைக்குப் பிறகு வங்கதேசத்திற்குத் தப்பிச் சென்ற நிஷி, சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்து புனேவில் வேறொருவரைத் திருமணம் செய்து தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். ரகசியத் தகவலின் அடிப்படையில் சேலம் தனிப்படை போலீசார் புனே சென்று நிஷியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதோடு, தலைமறைவாக உள்ள லப்லு உள்ளிட்ட மற்ற 3 குற்றவாளிகளையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
