CRIME
“போலீசுக்கே ரூ.10 கோடி லஞ்சமா..?” வீரமணியின் பாலியல் வழக்கை அமுக்க நடந்த நள்ளிரவு பேரம்.. உளவுத்துறை விசாரணையில் அம்பலமான அடுத்தடுத்த அதிர்ச்சிகள்..!!
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பிரபல கிரானைட் தொழில் வர்த்தகர் வீரமணி. இவர், ‘போக்சோ’ சட்டத்தின் கீழ், சென்னை போலீசின் மத்திய குற்றப்பிரிவு விபசார தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பாலியல் வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகப் பிரபல நபர் வீரமணி என்பவர் சுமார் 50 கோடி ரூபாய் வரை சட்டவிரோதமாகப் பணப்பரிவர்த்தனை செய்து வழக்கை மறைக்க முயன்ற அதிர்ச்சித் தகவல் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வரும் போலீஸார், பாலியல் வழக்கில் தன் மீது எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்காமல் இருக்க, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே வீரமணி 10 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சமாகக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மெகா செட்டில்மென்ட்டிற்காகத் சென்னை ஈசிஆர்பகுதியில் இருந்த சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு நிலத்தை, அவசர அவசரமாக 50 கோடி ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தை லஞ்சமாக மாற்றியுள்ளார் என்ற பகீர் விபரமும் தற்போது வெளியாகியுள்ளது.
இதேபோல, தனது சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளைச் சமாளிப்பதற்காக உதகையில் தனக்குச் சொந்தமாக இருந்த மற்றொரு பிரம்மாண்ட நிலத்தையும் வீரமணி 130 கோடி ரூபாய்க்கு விற்றுப் பணமாக்கியுள்ளார் என்ற புதிய தகவலும் உளவுத்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாலியல் குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்கப் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களை விற்று, அதிகாரிகளை விலைக்கு வாங்க முயன்ற இந்த விவகாரம் அரசியல் மற்றும் காவல்துறை வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதுடன், அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
