CRIME
“3 மாசத்துல கணக்கை முடிங்க..!” 17 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. 14 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட மரணப் பைல்.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கர்நாடக மாநிலம் உஜிரே பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி சௌஜன்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய குழு அமைத்து தீவிரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்தத் துயரமான வழக்கின் மறுவிசாரணையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் முழுமையாக முடித்து, விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காலக்கெடு விதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஏற்கனவே கர்நாடக சிஐடி மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறை ஆகிய இரு முக்கிய முகமைகள் தனித்தனியாக விசாரணை நடத்தியிருந்தன. இந்த விசாரணைகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட ஒரே ஒரு நபர், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி கடந்த 2023-ஆம் ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் முழுமையாக விடுதலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முந்தைய விசாரணைகளின் போது பல முக்கிய ஆதாரங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி சௌஜன்யாவின் தாய் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவரது மனுவை ஏற்றே தற்போது உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால், 14 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்த மர்ம வழக்கிற்கு இறுதியாக நீதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
