LATEST NEWS
“உயிருடன் இருந்தபோதும் காப்பாற்றினாள், இறந்த பிறகும்..” 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த செவிலியர்.. உருக வைக்கும் பின்னணி..!!
கர்நாடகா சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா ஹொசகொப்பா கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளம் செவிலியர் டி.கே.கான்வி, மூளைச்சாவு அடைந்ததைத் தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்த நெகிழ்ச்சியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷிவமோகாவில் உள்ள நிர்மலா நர்சிங் ஹோம் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த கான்வி, கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி இரவுப் பணியில்நோயாளிகளைக் கவனித்துக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் நஞ்சப்பா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காகப் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிஎம்எஸ்எஸ்வொய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் தீவிர சிகிச்சை பலனின்றி, பிப்ரவரி 12 அன்று அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
தனது மகள் உயிருடன் இருந்தபோது நோயாளிகளைக் குணப்படுத்தி, அன்போடு கவனித்து வந்ததை நினைவுகூர்ந்த கான்வியின் குடும்பத்தினர், இந்த ஆறாத்துயரிலும் மனிதாபிமானத்துடன் அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்யத் துணிச்சலான முடிவை எடுத்தனர். கான்வியின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. “உயிருடன் இருந்தபோது நோயாளிகளைக் காப்பாற்றினாள், இறந்த பிறகும் பலருக்கு வாழ்வளித்துச் சென்றுள்ளாள்” என இளம் செவிலியர் கான்வியின் தியாகத்தையும், அவரது குடும்பத்தினரின் உன்னதமான மனிதாபிமானத்தையும் மருத்துவ உலகமும் பொதுமக்களும் கண்ணீர் மல்கப் பாராட்டி வருகின்றனர்.
