LATEST NEWS
“என்னை விட்டுடு..” கெஞ்சியும் இரக்கம் காட்டாத கொடூரன்.. பெண் ஆசிரியையை இழுத்துச் சென்று சுட்டுக்கொன்ற இளைஞர்.. வெளிவந்த திடுக்கிடும் சிசிடிவி காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் உள்ள ‘சில்ட்ரன் அகாதமி’ பள்ளியில் ஆசிரியை நிஷாத் பாத்திமா படுகொலை செய்யப்படுவதற்கு முந்தைய அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சியில், குற்றவாளியான சவூத் அன்சாரி பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியை நிஷாத் பாத்திமாவை வலுக்கட்டாயமாகவும் ஆக்ரோஷமாகவும் பிடித்து முதல் மாடி படிக்கட்டுகளை நோக்கி இழுத்துச் செல்வது தெளிவாகத் தெரிகிறது. நிஷாத் பாத்திமா தப்பிப்பதற்காகத் தொடர்ந்து கைகால்களை அசைத்து தீவிரமாகப் போராடுவதும் அதில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவத்தின் போது அருகில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இருந்தும் கூட, எவரும் குற்றவாளியைத் தடுத்து ஆசிரியையைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சிசிடிவியில் பதிவான இந்தக் கொடூரக் காட்சி நடந்த சில நிமிடங்களிலேயே முதல் மாடியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பள்ளி முழுவதும் அதிர்ந்தது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, சவூத் அன்சாரி ஆசிரியையை வலுக்கட்டாயமாக முதல் மாடிக்கு அழைத்துச் சென்று, மிக அருகில் வைத்து நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் நிஷாத் பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரைச் சுட்ட உடனடியாக, குற்றவாளி அதே துப்பாக்கியால் தனது தலையிலும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டான். பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, ஆசிரியை நிஷாத்தின் தலைப் பகுதியில் இரண்டும், கழுத்துப் பகுதியில் இரண்டுமாக மொத்தம் 4 தோட்டாக்கள் பாய்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து உயிரிழந்த ஆசிரியையின் சகோதரர் ஷாதாப் அக்தர் அளித்த புகாரின் பேரில், லக்கிம்பூர் காவல்துறை சவூத் அன்சாரி மீது கொலை வழக்கும், அவனது பெற்றோர் மீது சதித் திட்ட வழக்கும் பதிவு செய்துள்ளது. சவூத் அன்சாரி நீண்ட நாட்களாக நிஷாத் பாத்திமாவைத் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக சவூத்தின் பெற்றோரிடம் புகார் அளித்தும் எந்தப் பயனும் இல்லை எனக் கூறப்படுகிறது. தற்போது காவல்துறையின் தடயவியல் குழு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர், சிசிடிவி காட்சிகள், மொபைல் அழைப்பு விவரங்கள், சமூக வலைதளப் பதிவுகள் மற்றும் நேரில் பார்த்தவர்களின் வாக்குமூலங்களைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
