CRIME
“அதிகாலை 5 மணிக்கு பார்த்தப்போ பாயில அவ இல்ல…” 5 நாட்களாகக் கண்ணீரில் தவிக்கும் பெற்றோர்.. 7 வயது சிறுமி திடீர் மாயம்.. கிராமத்தையே தலைகீழாக மாற்றிய போலீசாரின் மெகா தேடுதல் வேட்டை..!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 11 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இரவிலேயே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறுநாள் அதிகாலை 5 மணியளவில் சிறுமி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்பொழுது கூடுதலாக 3 தனிப்படைகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 8 தனிப்படைகள் மூலம் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுமி ஹேமாவதியைத் தேடும் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு, கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தடய அறிவியல் நிபுணர் சண்முகம் தலைமையிலான குழுவினர் சிறுமியின் வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். வான்வழியாக ஆட்கள் செல்ல முடியாத மலைக்குன்றுகள் மற்றும் பாறை இடுக்குகளைக் கண்காணிக்க 50 ஆளில்லா வானூர்திகளும் விவசாய நிலங்கள், முட்புதர்கள் மற்றும் ஏரிகளில் தேட மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறுமியின் மாயம் தொடர்பாகப் போலீசார் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் செல்போன் கோபுரத் தரவுகளை ஆய்வு செய்து வருவதுடன், சந்தேகத்தின் பேரில் உள்ளூரைச் சேர்ந்த 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிணறுகளின் ஆழமான பகுதிகளில் தேடுவதற்காக மரக்காணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட சுருக்குமடி வலைகளைக் கொண்டும் தேடுதல் பணி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சிறுமி மாயமாகி ஐந்து நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தவொரு உறுதியான துப்பும் கிடைக்காததால், ஹேமாவதிக்கு என்ன நேர்ந்தது என்ற அச்சத்தில் பெற்றோரும் கிராம மக்களும் ஆழ்ந்த கவலையில் தவித்து வருகின்றனர்.
