LATEST NEWS
“போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் விஜய்க்கு நெருங்கிய தொடர்பு..?” தவெக நிர்வாகி பூபாலன் கைதால் வெடித்த பயங்கர சர்ச்சை.. திமுகவின் கிடுக்கிப்பிடி கேள்வி..!!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில், திமுக ஐடி விங் செயலாளரும் முன்னாள் எம்பியுமான மு. முகமது அப்துல்லா மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். நாகப்பட்டினத்தில் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தொடர்பாக தவெக நிர்வாகி வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் (DRI) சோதனை நடத்தியதை அடுத்து இந்த அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
முன்னதாக திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதைப்பொருள் வழக்கில் பிடிபட்டபோது, பொது இடத்தில் தமக்குச் சால்வை போர்த்திய ஒரே ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, பாஜாக அண்ணாமலையின் வார்ரூம் மற்றும் தவெகவினர் இணையத்தில் அவதூறு பரப்பியதை அப்துல்லா சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது தவெக நிர்வாகி பூபாலன் அதே மெத்தம்பெட்டமைன் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நிலையில், “விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முதல்வர் விஜயோடு பூபாலன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தவெக அமைச்சர் ஒருவர் மைதானத்தில் மாத்திரையை நசுக்கும் காணொளி போன்றவற்றை முன்வைத்து திமுக முன்னாள் எம்பி சாடியுள்ளார். போதைப்பொருள் கும்பலுடன் விஜய்க்குத் தொடர்பு உள்ளதா, அந்தப் பணத்தில்தான் கட்சி தொடங்கப்பட்டதா என்றெல்லாம் முன்பு திமுக மீது பழிசுமத்திய யூடியூபர்கள் இப்போது விவாதிப்பார்களா என்றும், உண்மைக்காகக் காத்திருப்போம் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
