CRIME
“மகளைப் பார்க்க வா…” என பாசவலை வீசிய கணவன்.. புதிய துணையுடன் சென்ற மனைவிக்கு வைக்கப்பட்ட மரணப் பொறி.. நடுங்க வைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 31 வயது அங்குர் படேல், தன்னுடன் வாழ மறுத்து புதிய துணையுடன் வாழ விரும்பிய தனது 32 வயது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்த மனைவி, வேறொருவருடன் லூசியானாவிற்குச் சென்றதால் ஆத்திரமடைந்த படேல், தனது மகளைச் சந்திக்கலாம் எனக் கூறி மனைவியைச் சிகாகோவிற்கு வரவழைத்துள்ளார். மகள் ஏற்கனவே இந்தியாவிற்கு அனுப்பப்பட்டதை அறியாமல் அங்கு வந்த மனைவி, கணவனுடன் மீண்டும் சேர மறுத்ததால் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கட்டிடத்திற்கு வெளியே காத்திருந்த பெண்ணின் காதலன், அவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்து காவல்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். ஆனால், சரியான வீட்டை அடையாளம் காண முடியாததால் போலீசார் முதலில் திரும்பியுள்ளனர். அன்று இரவு படேலின் குடியிருப்பிற்கு வந்த அவரது நண்பர்கள், அங்குள்ள சலவை இயந்திரத்திற்கு அருகில் அந்தப் பெண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். உடற்கூறாய்வில், அந்தப் பெண் இறப்பதற்கு முன் தற்காத்துக் கொள்ளப் போராடியதற்கான காயங்கள் இருப்பது உறுதியானது.
கொலையைச் செய்த பின் அங்குர் படேல் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டு சிகாகோவின் ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். டிக்கெட் கவுண்டர் மூடப்பட்டிருந்ததால், அருகில் உள்ள ஹோட்டலில் தங்கி, கொலைக்கு பயன்படுத்திய கத்தியை மறைத்துவிட்டு, புதிய ஆடைகளை வாங்கியுள்ளார். மறுநாள் இந்தியாவிற்கான விமானத்தில் ஏறுவதற்கு முன்பாக காவல்துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் மனைவியின் புதிய வாழ்க்கை முடிவால் ஏற்பட்ட ஆத்திரத்திலேயே இதைக் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் மீது முதல்நிலைக் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
