CRIME
நீதிமன்ற வாசலிலேயே துடிக்க துடிக்க… விவாகரத்து விசாரணைக்கா வந்தபோது மனைவியை கொலை செய்த கணவன்.. கன்னியாகுமரியில் பயங்கரம்..!!
குமரி மாவட்டம் தக்கலை அருகே விவாகரத்து வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த மனைவியை, கொத்தனாரான கணவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈத்தவிளையைச் சேர்ந்த கொத்தனார் வின்சென்ட் ராஜ் (43) என்பவருக்கும், ஜெர்லின் பிரேமா (35) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, 4.5 வயதில் ஒரு மகன் உள்ளார். வின்சென்ட் ராஜ் மதுபோதையில் அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்லின் பிரேமா தனது மகனுடன் தாய் வீட்டுக்குச் சென்று, பத்மநாபபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜெர்லின் பிரேமா தனது தம்பியுடன் நேற்று காலை நீதிமன்றத்திற்கு வந்தபோது, அங்கு வந்த வின்சென்ட் ராஜ் திடீரென தகராறில் ஈடுபட்டு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஜெர்லின் பிரேமாவின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
தகராறுக்குப் பின் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வின்சென்ட் ராஜை, அங்கிருந்த வழக்கறிஞர்களும் பொதுமக்களும் துரத்திச் சென்று பேலஸ் ரோட்டில் வைத்து மடக்கிப் பிடித்தனர். அவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், பின்னர் தக்கலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் வின்சென்ட் ராஜைக் கைது செய்து விசாரித்து வரும் நிலையில், படுகாயமடைந்த ஜெர்லின் பிரேமா சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
