CRIME
பட்டப்பகலில் பயங்கரம்.. தந்தையின் அலறல்… கண்ணெதிரே துடிதுடித்த மகன்.. ஆட்டோவை மறித்த 4 ரவுடிகளின் வெறியாட்டம்.. நடுரோட்டில் நடந்த ரத்தச் சரித்திரம்..!!
சென்னை அடையார் இந்திரா நகரில், தந்தையின் கண் முன்னே மைத்ரேயன் என்ற 21 வயது இளைஞர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த இவர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ள நிலையில், சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகக் காவல் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த மைத்ரேயன், உயிருக்கு அஞ்சி திருவான்மியூர் மற்றும் ராயபுரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளில் மாறி மாறித் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், அக்டோபர் 27ஆம் தேதி காலை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் தனது தந்தை வேணுகோபாலுடன் ஆட்டோவில் சென்று கையெழுத்திட்டுவிட்டு, திருவான்மியூர் திரும்பிக் கொண்டிருந்தார். காலை 11.30 மணியளவில் அடையார் இந்திரா நகர் வாட்டர் டேங்க் அருகே ஆட்டோ வந்தபோது, இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆட்டோவை வழிமறித்தது. அக்கும்பல் மைத்ரேயனை ஆட்டோவிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கி, அவரது தந்தையின் கண் முன்னேயே கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
தகவலறிந்து வந்த அடையார் போலீசார், உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2025ஆம் ஆண்டு ஜீவா என்பவரை வெட்டிய வழக்கில் மைத்ரேயனுக்குத் தொடர்பு இருந்ததும், பழிவாங்கவே இக்கொலை நடந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, இக்கொலை வழக்கில் தொடர்புடைய ஜீவா மற்றும் அசாருதீன் ஆகிய இருவரும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி மைத்ரேயனின் உறவினர்கள் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
