LATEST NEWS
சென்னையில் அதிகாலையில் கொடூரம்..! வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வெடித்துச் சிதறிய ஃப்ரிட்ஜ் – தீயில் கருகி பெண் பலி..!!
சென்னை கொரட்டூரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அகிலா என்ற அந்தப் பெண் மாற்றுத்திறனாளி என்பதால், தீப்பற்றியவுடன் அவரால் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதே இந்தத் துயரத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
இந்த விபத்தின்போது வீட்டில் இருந்த அகிலாவின் கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரும் பலத்த தீக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக வீட்டிலிருந்து வெளியேறி உயிர் தப்பினர். கொளுந்துவிட்டு எரிந்த தீயால் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல்துறையினர், உயிரிழந்த அகிலாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காயமடைந்த அவரது கணவர் மற்றும் மகனை மீட்டு தீவிர சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்த வெடி விபத்து நிகழ்ந்ததா அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
