LATEST NEWS
திமுக-வில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்.. ‘தளபதிகளை’ தேர்ந்தெடுப்பதில் மூன்று முனை அழுத்தம்.. உதயநிதிக்கு செக் வைத்த கனிமொழி..? ஸ்டாலின் வெளியிடப்போகும் அந்த ‘பட்டியல்’..!!
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் திமுகவில் 110 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாகக் கட்சித் தலைமைக்குள் கடுமையான மூன்று முனை இழுபறியும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2026 பொதுத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைக்க 70 வயது வரம்பை நிர்ணயிக்கவும், மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 110 ஆக உயர்த்தவும் திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாகப் பல மூத்த நிர்வாகிகள் தங்களது பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியலைத் தயாரிப்பதில் திமுகவின் முக்கிய அதிகார மையங்களுக்கு இடையே மறைமுகப் போட்டி தீவிரமடைந்துள்ளது. இளைஞரணியினருக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் கட்சித் தலைமைக்கு கடுமையான அழுத்தம் கொடுத்து, தனக்குத் தோதான நபர்களின் பட்டியலையும் வழங்கியுள்ளார். இதற்கு இணையாக, மகளிர் அணிச் செயலாளரான கனிமொழி எம்பி, தென் மாவட்டங்களில் புதிய மாவட்டச் செயலாளர்களைத் தன்னைக் கேட்காமல் தேர்வு செய்யக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் மகளிர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியின் படங்கள் இடம்பெறாமல் கனிமொழி தவிர்த்தது கட்சிக்குள் இந்த அதிகாரப் போட்டியைப் பகிரங்கப்படுத்தியுள்ளது.
மறுபுறம், மற்ற மாவட்டச் செயலாளர்களும் தங்களது வாரிசுகள் மற்றும் ஆதரவாளர்களுக்குப் பரிந்துரைகளை வழங்கி வருவதால், மூன்று முனை அழுத்தத்தில் முடிவெடுக்க முடியாமல் திமுக தலைமை திணறி வருகிறது. வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தல்கள் திமுகவிற்கு மிக முக்கியம் என்பதால், தற்பொழுது புதிய பட்டியலை வெளியிட்டால் அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்துவது கடினம் எனத் தேர்தல் முடியும் வரை காத்திருக்கலாமா என்றும் தலைமை ஆலோசித்து வருகிறது. எனினும், சில இளைஞரணி நிர்வாகிகளுக்கு வாய்ப்பு கிடைப்பது உறுதி எனக் கூறப்படும் நிலையில், இதன் இறுதி முடிவு விரைவில் வெளியாகவுள்ள மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்பில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
