“அரசியலில் ‘செத்த மொழி’… வீட்டில் ‘வேத மந்திரம்’..!” துரைமுருகனுக்கு நாராயணன் திருப்பதி வைத்த செம ட்விஸ்ட்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அரசியலில் ‘செத்த மொழி’… வீட்டில் ‘வேத மந்திரம்’..!” துரைமுருகனுக்கு நாராயணன் திருப்பதி வைத்த செம ட்விஸ்ட்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேத்தி திருமணத்தில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் பேத்தியும், வேலூர் எம்பி கதிர் ஆனந்தின் மகளுமான செந்தாமரைக்கும், திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் இடையே கடந்த நவம்பர் 1-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக் கொள்கைகளைப் பேசும் திராவிட இயக்கத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் துரைமுருகன் வீட்டுத் திருமணத்தில், பார்ப்பனப் புரோகிதர்களைக் கொண்டு சமஸ்கிருத சடங்குகள் நடத்தப்பட்டது திராவிடர் கழகத்தினர் மற்றும் வலதுசாரி அமைப்புகளிடையே வெவ்வேறு விதமான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் இரட்டை நிலையை விமர்சித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஆகஸ்ட் 2024-இல் “சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி” என்று கூறிய துரைமுருகன், தற்போது தனது குடும்பத் திருமணத்தைச் சமஸ்கிருத வேத மந்திரங்கள் முழங்க நடத்தியுள்ளார் என்று சுட்டிக்காட்டியுள்ளார். திமுகவினர் தங்களின் குடும்ப நிகழ்ச்சிகளின் போது மட்டும் சமஸ்கிருதத்தை விரும்புவார்கள், மற்ற நேரங்களில் அதனை எதிர்ப்பார்கள் என்பதை நிரூபித்த துரைமுருகனுக்கு நன்றி என்றும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

மறுபுறம், திராவிட இயக்கக் கொள்கையாளர்கள் பலரும் துரைமுருகனின் இந்த நடவடிக்கைக்குக் கடுமையான கண்டனங்களையும் வேதனையையும் தெரிவித்து வருகின்றனர். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், துரைமுருகன் இல்லத் திருமணத்தில் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டது தனது இதயத்தை வலிக்கச் செய்வதாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கையில், தந்தை பெரியார் அறிமுகப்படுத்தி, பேரறிஞர் அண்ணா சட்டப்பூர்வமாக்கிய சுயமரியாதைத் திருமணக் கொள்கையிலிருந்து கட்சியின் பொதுச் செயலாளரே வழுவலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எதிர்க்கையாளர்களுக்கு அவலாக மாறும் இதுபோன்ற இரட்டை நிலை நடவடிக்கைகள் இனி தொடராத வண்ணம் திமுக தலைமை கவனிப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in