LATEST NEWS
தமிழகம் முழுவதும் பரபரப்பு..! அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உடனே இதை செய்ய வேண்டும்… ஐகோர்ட் ஆணை..!!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்துவது தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலந்த விவகாரத்தை விசாரிக்க சுதந்திரமான குழுவை அமைக்கவும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கோரி பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவர்களே தண்ணீர் தொட்டிக்குள் மலம் கலந்ததற்கான வீடியோ ஆதாரங்களைச் சமர்ப்பித்தனர். இதனைக் கண்ட நீதிபதிகள், இந்த ஆதாரங்களை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தில் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், இதுவரை எத்தனை பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, எத்தனை பள்ளிகளில் பொருத்தப்பட வேண்டும் மற்றும் அதற்கான திட்ட மதிப்பீடு எவ்வளவு என்பது குறித்த விவரங்களுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
