CRIME
“அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..” விழுப்புரத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் சிறுமிகள் கடத்தல் முயற்சி.. பீதியில் உறைந்த பெற்றோர்கள்..! பின்னணியில் இருப்பது யார்..?!
விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்தடுத்து சிறுமிகளை கடத்த முயன்ற சம்பவங்கள் பெற்றோர்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமாகி ஒரு மாதத்தை கடந்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமிகளை கடத்த முயலும் தொடர்ச்சியான சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரம் அருகே அய்யூர் அகரத்தில் தெருவில் விளையாடிய சிறுமியை வடமாநில வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் நடந்தது. அவர்களை மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, செஞ்சி அருகே ஜெயங்கொண்டம் கிராமத்தில் கடந்த 10-ந் தேதி சிறுமி ஒருவரை ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் கடத்த முயன்றனர். அப்போது சிறுமி சத்தம் போடவே, அந்த மர்மநபர்கள் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இந்த வழக்கில் நேற்று 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து வந்த மற்றொரு சம்பவமாக, நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரம் அடுத்த கண்டமானடியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கோவில் அருகே பட்டாசு வெடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஸ்கூட்டரில் வந்த 2 பேர் அந்த சிறுமியை கடத்த முயன்றனர். துரிதமாக செயல்பட்ட சிறுமி, அவர்களின் கையை கடித்துவிட்டு அவர்களிடமிருந்து தப்பியோடினார். அடுத்தடுத்து விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளை கடத்த முயற்சிக்கும் இந்த தொடர் சம்பவங்கள் அப்பகுதி பொதுமக்களையும் பெற்றோர்களையும் மிகுந்த பீதியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
