LATEST NEWS
“என் புருஷனை விடுங்க” காவல்நிலையத்திற்குள்ளேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த மனைவி… 125 நாள் வேலைத் திட்டத் தகராறால் வெடித்த சோகம்..!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஒறையூர் ஊராட்சியில், 125 நாள் வேலை வழங்கும் திட்டத்தின் பணித்தளப் பொறுப்பாளரான கண்மணிக்கும் (28), ஊராட்சி எழுத்தர் அருளுக்கும் (53) இடையே வேலை ஒதுக்குவது தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாகப் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, விசாரணைக்காகக் கண்மணியின் கணவர் லட்சாதிபதியை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதனை அறிந்து மாலை 4.30 மணியளவில் காவல் நிலையத்திற்கு வந்த கண்மணி, தனது கணவர் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது, தான் கேனில் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலை நுழைவு வாயிலிலேயே தன் மீது ஊற்றித் தீ வைத்துக்கொண்டார்.
உடலில் தீப்பற்றிய நிலையில் காவல் நிலையத்திற்குள் ஓடிய கண்மணியை போலீசார் துரிதமாகச் செயல்பட்டு மீட்டுத் தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
