LATEST NEWS
ஜெம் வீரமணியின் வீட்டில் தோண்டியதில் கிடைத்தது என்ன..? சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி..!!
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை (போக்சோ) வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் வீரமணியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த விவரங்கள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படும் எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
போக்சோ வழக்கில் கைதாகியுள்ள வீரமணி தொடர்பான வழக்குகளைச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையின் போது, வீரமணியின் வீட்டில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டதாக அவரது கார் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் வீரமணியின் வீட்டு வளாகத்தில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தோண்டித் தீவிரச் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றித் தங்கள் வீட்டில் சோதனை நடத்தி மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கூறி, வீரமணியின் மகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, வீரமணியின் ஓட்டுநர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திறந்தவெளிப் பகுதியில் சோதனை நடத்தப்பட்டதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “வீட்டில் தோண்டிச் சோதனை நடத்தியதில் கிடைத்தது என்ன?” எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சிறப்புப் புலனாய்வுக் குழு தரப்பு, சோதனையில் கிடைத்த விவரங்களை விரிவான பதில் மனுவாகத் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தது.
