CRIME
போலீஸ் காதலனுக்காகக் கணவரைத் தீர்த்துக்கட்ட ரூ.6 லட்சம்… நடுரோட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நடந்த டுவிஸ்ட்.. மனைவியின் கொலைச் சதியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய கணவன்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், தனது கணவரைக் கொலை செய்வதற்காக மனைவியே 6 லட்சம் ரூபாய் கூலிப்படையினருக்குப் பேரம் பேசிய அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆஷி மிஸ்ரா என்ற பெண், தனது காதலனும் உத்தரப் பிரதேச காவல்துறைக் காவலருமான நிதின் ராணாவுடன் இணைந்து, கணவர் அனுராக் சுக்லாவைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார். இதற்காகக் கூலிப்படையினருக்கு 6 லட்சம் ரூபாய் கொடுப்பதாக அவர்கள் ஒப்பந்தம் பேசியுள்ளனர்.
திட்டமிட்டபடி பூர்ணியா சௌராஹா அருகே அனுராக் சுக்லாவை வழிமறித்த கூலிப்படையினர், அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அனுராக்கின் வலது கையில் குண்டு பாய்ந்த நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி முக்கியக் குற்றவாளிகளைக் கண்டறிந்தனர்.
விசாரணையின் அடிப்படையில், கணவரைக் கொல்லச் சதித்திட்டம் தீட்டிய மனைவி ஆஷி மிஸ்ரா லக்னோவில் கைது செய்யப்பட்டார். மேலும், இந்தக் கொலை ஒப்பந்தத்தில் ஈடுபட்ட காவலர் நிதின் ராணா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த மயங்க் வசிஸ்த், சுபம் சர்மா, சிவம் ராஜ்புத் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மயங்க் ராஜ்புத் என்ற மற்றொரு குற்றவாளி தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்கக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
