CRIME
அடப்பாவமே.. காலில் சிறு காயத்திற்குச் சென்ற 24 வயது இளைஞர்.. ஆனா இடது காலையே இழந்த கொடுமை.. தனியார் மருத்துவமனைக்கு நீதிமன்றம் கொடுத்த மரண அடி..!
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அலட்சியமான சிகிச்சையால் தனது காலை இழந்த 24 வயது இளைஞருக்கு, சுமார் 35.68 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. மருள்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தினேஷ்குமார் என்பவர், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் காலில் படுகாயமடைந்து உடுமலை கோகுல் பாலிகிளினிக் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட முறையற்ற சிகிச்சையின் விளைவாக அவரது காலில் கடுமையான நோய்த்தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்தான சூழல் உருவானது. இதன் காரணமாக, அதே ஆண்டு நவம்பர் 30-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது இடது கால் முட்டிக்குக் கீழே முழுமையாக அகற்றப்பட்டது.
மருத்துவமனையின் கவனக்குறைவால் தனது எதிர்காலமும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்ட தினேஷ்குமார் திருப்பூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் நீதி கேட்டு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் சேவைக் குறைபாடு மற்றும் தவறான சிகிச்சை முறைகளை ஆதாரங்களுடன் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து, இளைஞரின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, கோகுல் பாலிகிளினிக் நிர்வாகம் பாதிக்கப்பட்ட தினேஷ்குமாருக்கு ரூ.35,68,313 இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் கறாராக உத்தரவிட்டுள்ளது.
