LATEST NEWS
“திமுக, தவெக போடும் பிச்சையில் பிழைக்கும் காங்கிரஸ்…” கையில் இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் 5 ஆனது எப்படி..? மாணிக்கம் தாகூருக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி..!!
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் விமர்சனத்திற்குத் தனது எக்ஸ் பக்கத்தில் காட்டமாகப் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவும் தவெக-வும் போடும் பிச்சையில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் பிழைத்துக் கொண்டிருப்பதாகவும், கையில் இருந்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இப்போது 5-ஆகக் குறைந்துவிட்ட நிலையில், தங்கள் கட்சியின் கடந்த கால வரலாற்றையும் இன்றைய நிலையையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜீவ் காந்தி தலைமையில் 400 இடங்களில் வென்ற காங்கிரஸ், இன்று தொடர்ந்து மூன்று பொதுத் தேர்தல்களில் 100 இடங்களைக் கூடத் தாண்ட முடியாத நிலைக்குச் சுருங்கிவிட்டதாக நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கச்சத்தீவு விவகாரம், காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு நதிநீர் உரிமைகள், 1975 அவசரநிலை மற்றும் மாநில அரசுகள் கலைக்கப்பட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். திமுகவின் பெயரில் வாக்கு பெற்று தவெக-வை எதிர்த்தவர்கள், இப்போது அதே தவெக-வுடன் பேரம் பேசி அமைச்சரவையில் இடம் பிடிக்க முயல்வதாகவும், கொள்கை இல்லாத சந்தர்ப்பவாத அரசியலே காங்கிரஸின் வழக்கம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். வாக்குத் திருட்டு குறித்துப் பேசும் காங்கிரஸ், கேரளா மற்றும் கர்நாடகாவில் எப்படி ஆட்சிக்கு வந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெறும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடங்கிய பாஜக இன்று நாட்டையே ஆளும் அளவுக்கு வளர்ந்துள்ளது போல, இங்குள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினரையும் சாதாரணமாகக் கருத வேண்டாம் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ராஜாஜி மற்றும் காமராஜர் வளர்த்த கட்சி இன்று மற்றவர்களை நம்பி இருக்கும் நிலைக்கு வந்துவிட்டதாகக் கூறி, மாணிக்கம் தாகூருக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
