LATEST NEWS
“எனக்கு சாப்பாடு வேண்டாம்.. ஐபோன் தான் வேணும்..” 3 நாட்களாக பட்னி கிடந்த மகன்.. இயலாமையுடன் சேமிப்புப் பணத்தைக் கொடுத்த தாயின் கண்ணீர் வார்த்தைகள்.. இணையத்தை உலுக்கும் நெகிழ்ச்சியான சம்பவம்..!!
கோவில் வாசலில் பூ விற்றுத் தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ஏழைத் தாய் ஒருவர், தனது மகனின் பிடிவாதத்திற்காகக் கஷ்டப்பட்டுச் சேமித்த பணத்தில் ஐபோன் வாங்கிக் கொடுத்த நெகிழ்ச்சியான மற்றும் வேதனையான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்றாடக் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதே பெரும் சவாலாக இருந்த நிலையில், அந்தத் தாயின் மகன் தனக்கு ஐபோன் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். முதலில் தனது வருமான நிலைமையை எடுத்துக்கூறித் தாய் மறுத்தபோதிலும், அந்த இளைஞன் தனது பிடிவாதத்தை விடாமல் தொடர்ந்து மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் பட்டினி கிடந்துள்ளார்.
மகன் மூன்று நாட்களாக உணவு உண்ணாமல் இருப்பதைக் கண்டு மனம் உடைந்த அந்தத் தாய், வேறு வழியின்றி மகனின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். தான் பூ விற்றுச் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு, மகனுடன் செல்போன் கடைக்குச் சென்றார். அங்கு ஐபோன் வாங்க வந்திருந்தவர்களிடம் கடைக்காரர் விசாரித்தபோது, அந்தத் தாய் கூறிய வார்த்தைகள் அங்கிருந்த அனைவரையும் ஆழ்ந்த சிந்தனையிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.
“நான் கோவில் வாசலில் பூ விற்றுப் பிழைப்பு நடத்துகிறேன். என் மகன் ஐபோன் கேட்டு மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் இருந்தான். அதனால் வேறு வழியில்லாமல் என் பணத்தை அவனிடம் கொடுத்துவிட்டேன்” என்று அந்தத் தாய் கண்களில் இயலாமையுடன் கூறினார். அருகில் அந்த இளைஞன் கையில் பணத்துடன் போன் வாங்குவதற்காக நின்று கொண்டிருந்த நிலையில், தாயின் முகத்தில் மகிழ்ச்சிக்குப் பதிலாக ஒருவிதமான ஆழ்ந்த துயரமே தெரிந்தது.
மேலும் கடைக்காரரிடம் பேசிய அந்தத் தாய், “இப்போது நான் பணம் கொடுத்துவிட்டேன்; ஆனால் இனி அவன் கடினமாக உழைத்து இந்தப் பணத்தைச் சம்பாதித்து எனக்குத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று உருக்கமாகக் கூறினார். தன் வாழ்நாள் முழுவதும் பிள்ளைகளின் தேவைகளுக்காகவே உழைத்த ஒரு தாய், இன்று மகனின் ஆடம்பர ஆசைக்காகத் தனது உழைப்பின் சேமிப்பைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட இந்த வீடியோ, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
