LATEST NEWS
“உச்ச நீதிமன்றத்தை விட உயர் அதிகாரம் படைத்தவரா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்?” மத கலவரம் தூண்ட பாக்குறாங்க… திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பெ. சண்முகம் எழுப்பிய சரமாரி கேள்வி..!!
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான வழக்குகள் மீண்டும் மீண்டும் ஒரே நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதனிடம் விசாரணைக்கு வருவது எப்படி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதுரை மாவட்ட ஆட்சியர் நிறைவேற்றவில்லை என்றால், அவர் உச்ச நீதிமன்றத்திற்கே பதிலளிக்க வேண்டுமே தவிர உயர் நீதிமன்றத்திற்கு அல்ல என்று கூறிய பெ. சண்முகம், “அப்படியானால் உச்ச நீதிமன்றத்தை விட உயர் அதிகாரம் படைத்தவரா நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்?” எனச் சாடியுள்ளார். மேலும், நீதிபதிகள் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திணிக்காமல் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்றும், ஜி.ஆர். சுவாமிநாதனின் அத்துமீறல் குறித்துத் தமிழ்நாடு தலைமை நீதிபதி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று திருப்பரங்குன்றத்தில் கோயில் ஆகம விதிகளின்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளதற்காகத் தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், இந்த விவகாரத்தை வைத்து மதக் கலவரத்தைத் தூண்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் முயல்வதாகக் குற்றம்சாட்டினார். மேலும், கோயில் சம்பந்தப்பட்ட இந்தப் பிரச்சனையை உலகப் பிரச்சனை போல உச்ச நீதிமன்றம் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இதில் நிரந்தரத் தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் பெ. சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
