LATEST NEWS
அய்யோ கடவுளே.. தேங்கிய மழை தண்ணீருக்குள் மறைந்திருந்த மரணக்குழி.. 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்… உலுக்கும் சிசிடிவி வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரில், மழையால் தேங்கிய தண்ணீருக்கு அடியில் மறைந்திருந்த திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்க்குள் விழுந்து 12 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மொஹல்லா அன்சாரியான் பகுதியைச் சேர்ந்த அப்சல் என்பவரின் 12 வயது மகன் ஹம்மாத் சனிக்கிழமை அன்று ஈத்கா சாலை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது இஸ்லாமியா இன்டர் காலேஜ் முன்பாக பெய்த கனமழை காரணமாகச் சாலையில் கடுமையான தண்ணீர் தேங்கியிருந்ததால், அங்கிருந்த திறந்தவெளி சாக்கடைக் கால்வாய் சிறுவனின் கண்ணுக்குத் தெரியவில்லை. எதிர்பாராத விதமாக அந்தத் திறந்தவெளிக் கால்வாய்க்குள் சிறுவன் தவறி விழுந்த கொடூரக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி நெஞ்சை உலுக்கியுள்ளது.
சாக்கடைக் கால்வாயின் அடியில் இருந்த கடுமையான நீரோட்டத்தின் காரணமாக, அந்தச் சிறுவன் கண் இமைக்கும் நேரத்திற்குள் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு நீரில் அடித்துச் செல்லப்பட்டான். சிறுவன் காணாமல் போனதைத் தொடர்ந்து உறவினர்களும் உள்ளூர் மக்களும் நீண்ட நேரம் தேடிய நிலையில், விழுந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த ஒரு பெரிய பிவிசி குழாய்க்குள் சிறுவனின் உடல் சிக்கியிருந்ததை மீட்டனர். நகராட்சி மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அப்பட்டமான அலட்சியத்தால், திறந்தவெளிக் கால்வாய்களை மூடாமல் விட்டதே இந்த ஒரு பிஞ்சு உயிரின் மரணத்திற்கு முக்கியக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
