LATEST NEWS
என்ன ஒரு விசுவாசம்…! 1 மணி நேரம் பாம்போடு போராடி… தன் குடும்பத்தைக் காப்பாற்றிய ‘டாமி’..! உயிரைத் தியாகம் செய்த வளர்ப்பு நாயின் வைரல் வீடியோ…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியாவில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த தன் உரிமையாளரின் குடும்பத்தைப் பாதுகாக்க, ‘டாமி’ என்ற 9 வயது வளர்ப்பு நாய் பாம்புடன் போராடி தன் உயிரைத் தியாகம் செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில், வீட்டின் வாயிலை நோக்கி வந்த விஷப்பாம்பை உணர்ந்த டாமி, தொடர்ந்து சத்தமாக குரைத்துத் தூங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினரை எச்சரித்தது. பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில், வீட்டின் நுழைவாயிலில் நின்றுகொண்டு அதைத் தைரியமாக எதிர்கொண்டது.
அந்த விஷப்பாம்புடன் டாமி ஏறத்தாழ ஒரு மணி நேரம் தீவிரமாகப் போராடியது. இறுதியில் அந்தப் பாம்பைக் கடித்துக் கொன்ற போதிலும், சண்டையின் போது பாம்பு தீண்டியதால் டாமியின் உடலில் விஷம் ஏறியது. வீட்டின் மீதான ஆபத்தை முழுமையாக நீக்கிய பிறகு, விஷத்தின் வீரியம் தாங்க முடியாமல் சுமார் ஒரு மணி நேரத்தில் அந்த நன்றியுள்ள நாய் பரிதாபமாகக் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக அக்குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே வாழ்ந்து வந்த டாமியின் பிரிவு, குடும்பத்தினரையும் அக்கம் பக்கத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “டாமி அன்று அந்தப் பாம்பைத் தடுத்திருக்காவிட்டால், அது வீட்டிற்குள் புகுந்து யாரையாவது தீண்டியிருக்கும்” என்று நெகிழ்ச்சியோடு கூறிய குடும்பத்தினர், அதற்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். டாமியின் இணையற்ற நன்றியுணர்வையும் தியாகத்தையும் அப்பகுதி மக்கள் வியந்து போற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
