LATEST NEWS
“என்னை காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி… இப்போ எனக்கு நல்ல சாப்பாடும்… போடுறதுக்கு நல்ல டிரஸ்ஸும் கிடைச்சிருக்கு…” குவைத் இந்திய தூதரகத்தில் இருந்து வெளியான அந்த ஒரு வீடியோ… கண்கலங்க வைக்கும் பின்னணி..!!
தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வனீதா என்பவர் கடந்த மூன்று மாதங்களாக குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்தார். அங்கு அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், கடந்த இரண்டு மாதங்களாக அவருக்குச் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தலைமீது துணியைப் போர்த்தியபடி, கைகூப்பி, “என்னை எப்படியாவது காப்பாற்றி தாய்நாடான இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுங்கள், என்னால் இனி இங்கு இருக்க முடியாது” என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் அழுது வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, வனீதாவின் குடும்பத்தினரைக் கண்டறிந்தனர். அவரது தாயார் வெண்ணிலா, வேலை வாங்கித் தருவதாகக் கூறி முகவர் ஏமாற்றிவிட்டதாகக் கூறி கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஷாநவாஸிடம் புகார் அளித்தார். இதையடுத்து, காவல் துறையினரும் அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்குத் தகவல் தெரிவித்து, வனீதாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய தூதரகத்தின் விரைவான நடவடிக்கையால் வனீதா பத்திரமாக மீட்கப்பட்டுத் தூதரகத்தில் தங்கவைக்கப்பட்டார். மீட்புக்குப் பிறகு அவர் வெளியிட்ட புதிய வீடியோவில், பச்சை நிற குர்தா அணிந்து பிரகாசமாக நின்று, நன்றியோடு கைகூப்பியபடி பேசினார். அதில், “இந்திய தூதரகத்தின் உதவியைக் கேட்ட வனீதா நான் தான். இப்போது நான் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். இந்திய தூதரகத்திற்கு ரொம்ப நன்றி. எனக்கு இப்போது நல்ல உடையும், நல்ல உணவும் கிடைக்கிறது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அவரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
