CRIME
ஹாலிவுட் பட பாணி கார் சேஸிங்.. 11 வயது சிறுமியை கடத்தி சிக்னல்களைத் தகர்த்துப் பறந்த கொடூரன்… நெகிழ வைத்த தம்பதியின் வீரச் செயல்.. பதறவைக்கும் பின்னணி..!!
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில், பள்ளிப் பேருந்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த சார்லட் என்ற 11 வயது சிறுமி, நீல நிற ஹோண்டா காரில் வந்த நபரால் கொடூரமான முறையில் கடத்தப்பட்டார். இச்சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமண்டா டிஸ்லி மற்றும் பென்னி கொரியா என்ற தம்பதியினர் தங்களது ஐந்து குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே நீல நிற ஹோண்டா கார் தங்களுக்கு அருகில் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அமண்டா உடனடியாக அவசர சேவைகளைத் தொடர்புகொள்ள, அவரது கணவர் பென்னி போக்குவரத்து நெரிசலையும் பொருட்படுத்தாமல் அந்த காரைத் தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளார். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகக் கடத்தல்காரன் சிக்னல்களை மதிக்காமல் பக்கத்துச் சந்துகளில் அதிவேகமாக காரைச் செலுத்தியபோதும், இத்தம்பதியினர் தங்களின் பார்வையில் இருந்து அந்த காரைத் தவறவிடாமல் பின்தொடர்ந்து, தங்களின் இருப்பிடத்தை போலீசாருக்குத் தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டே இருந்தனர்.
இறுதியாக, துரிதமாகச் செயல்பட்ட போலீசார் அந்த ஹோண்டா காரைச் நாற்புறமும் சூழ்ந்து மடக்கிப் பிடித்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த சிறுமி சார்லட் எவ்வித ஆபத்துமின்றி பத்திரமாக மீட்கப்பட்டு, அவரது குடும்பத்தினருடன் மீண்டும் ஒப்படைக்கப்பட்டார். கடத்தலில் ஈடுபட்ட 24 வயதுடைய மிகுவல் ரோட்ரிக்ஸ் என்ற வாலிபரைக் கைது செய்த போலீசார், அவர் மீது கடத்தல், ஆபத்தான ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் சாட்சிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பல கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், அந்த காரை விடாமல் துரத்திச் சென்று சிறுமியை மீட்ட அமண்டா மற்றும் பென்னி தம்பதியினரின் மனிதநேயமிக்க இந்த வீரச் செயல் சமூக ஊடகங்களில் உலக அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
