LATEST NEWS
திடீரென சரிந்த 600 கிலோ ராட்சத இரும்பு கேட்… நள்ளிரவில் செக்யூரிட்டி கார்டுக்கு நேர்ந்த கொடூரம்… கான்பூரில் அரங்கேறிய நெஞ்சை உலுக்கும் சோகம்..!
உத்தரப் பிரதேசம் கான்பூர் பன்கி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், சுமார் 600 கிலோ எடையுள்ள ராட்சத ஸ்லைடிங் இரும்பு கேட் விழுந்து 55 வயது பாதுகாப்பு காவலர் விக்ரம் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நடந்த இந்த விபத்தில், இரும்பு கேட்டிற்கு அடியில் நசுங்கி சுமார் 3 மணி நேரம் விக்ரம் சிங்கின் உடல் யாருக்கும் தெரியாமல் அங்கியே கிடந்துள்ளது. சனிக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் அங்கு வசிக்கும் ஆசிரியை ஒருவர் பார்த்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அபார்ட்மெண்டில் இருந்த சிசிடிவி காட்சிகளின்படி, நள்ளிரவு 1:19 மணியளவில் விக்ரம் சிங் குடியிருப்பின் முக்கிய நுழைவாயில் கேட்டைத் திறக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக 1:24 மணியளவில் அந்த ஸ்லைடிங் கேட் அப்படியே சரிந்து அவர் மீது விழுந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், அந்த ஸ்லைடிங் கேட்டிற்கான ஸ்டாப்பர் தேய்மானம் அடைந்திருந்ததும், கேட் சுவரைத் தாண்டி கீழே விழாமல் தடுக்கும் பாதுகாப்பு இரும்பு கம்பி பொருத்தப்படாமல் இருந்ததும் தெரியவந்துள்ளது. உரிய நேரத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததே இந்த விபத்திற்குக் காரணம் என பாதுகாப்பு காவலரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விக்ரம் சிங்கின் மரணத்தைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உரிய இழப்பீடு கோரி சடலத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பன்கி போலீசார் முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குடியிருப்பின் பாதுகாப்புப் பிரிவு மற்றும் அங்குள்ள குடும்பத்தினர் இணைந்து தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு லட்சம் ரூபாயை விக்ரம் சிங்கின் குடும்பத்திற்குத் தற்காலிக நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இருதரப்பிலும் சுமுக உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விரிவான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
