LATEST NEWS
திமுக – தவெக ஒரே அணியில் ஏன் இருக்கக் கூடாது…? திருமாவளவன் போட்ட குண்டு.. அதிரும் அரசியல் களம்..!!
தமிழ்நாட்டில் திமுக-வும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகமும் தற்போதைய சூழலில் நேரடி அரசியல் எதிரிகளாக வலம் வருகின்றன. இத்தகைய சூழலில், தேசிய அளவில் பாசிச மற்றும் மதவாத சக்தியான பாஜகவை வீழ்த்துவதையே முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளதால், கொள்கை ரீதியாக ஒருமித்த கருத்துடைய இரு கட்சிகளும் ஏன் தேசிய அளவில் ஒன்றிணையக் கூடாது என்ற திருமாவளவனின் கேள்வி புதிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு அவர் முன்வைக்கும் ‘கேரளா அரசியல் மாதிரி’ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை, அங்குள்ள மாநில அரசியலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் ஒன்றுக்கொன்று தீவிரமாக எதிர்த்துப் போட்டியிடுகின்றன. ஆனால், அதே கட்சிகள் டெல்லி என்று வரும்போது, தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் ‘INDIA’ கூட்டணியில்ஒரே அணியில் கைகோர்த்து நிற்கின்றன. அதே தத்துவத்தை ஏன் தமிழ்நாட்டிலும் அமல்படுத்தக் கூடாது என்பதே விசிக-வின் வாதமாக உள்ளது.
இருப்பினும், இந்த யோசனைக்கு தமிழக அரசியல் வட்டாரத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. தவெக ஏற்கனவே திமுகவை தனது ‘அரசியல் எதிரி’ என்றும், பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்றும் திட்டவட்டமாக அறிவித்து தனிப்பாதையில் பயணித்து வருகிறது. எனவே, மாநில அளவில் தீவிரமாக மோதும் திமுகவும் தவெகவும், திருமாவளவன் கூறுவது போல தேசிய அளவில் ஒரே கூட்டணியில் இணைவது சாத்தியமா அல்லது இது விசிக-வின் ஒரு தற்காலிக தேர்தல் உத்தியா என்ற கோணத்தில் அரசியல் விமர்சகர்கள் பல்வேறு விவாதங்களை நடத்தி வருகின்றனர்.
