LATEST NEWS
“மக்களின் பாதம் தொட்டு வாக்கு கேட்டேன், ஆனா…” கட்சித் தாவிய எம்.எல்.ஏ-க்களை வறுத்தெடுத்த அண்ணாமலை.. பரபரக்கும் அரசியல் களம்..!!
மன்னார்குடியில் நடைபெற்ற ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அண்ணாமலை, தாராபுரம் மற்றும் பெருந்துறை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கட்சித் தாவல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் வீதி வீதியாகச் சென்று, மக்களின் பாதம் தொட்டுத் தான் தீவிரப் பரப்புரை செய்து வாக்குகளைச் சேகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தற்பொழுது வாக்குகளைப் பெற்றுத் தந்த அந்தக் கட்சியிலேயே நீடிக்காமல் சுயநலத்திற்காகக் கட்சி மாறியிருப்பது வாக்களித்த மக்களுக்குச் செய்த துரோகம் என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மக்களின் விரல்களில் வைக்கப்பட்ட தேர்தல் மை காய்வதற்குள், மக்கள் பிரதிநிதிகள் தங்களது வேட்டியையும், கட்சியையும், தேர்தலின் போது பேசிய கொள்கைகளையும் மாற்றிவிட்டதாக அண்ணாமலை மிகக் காரசாரமாகச் சாடினார். கொள்கையற்ற இத்தகைய சுயநல அரசியல் கலாச்சாரத்தை முற்றிலும் உடைத்தெறிந்து, தூய்மையான மக்கள் அரசியலை முன்னெடுப்பதற்காகவே தங்களது அமைப்பு தற்பொழுது தீவிரமாகக் களத்தில் இறங்கியுள்ளதாக அவர் தனது உரையில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது நிலவி வரும் கட்சித் தாவல் விவாதங்களுக்கு மத்தியில், மன்னார்குடியில் அண்ணாமலை பேசியுள்ள இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
