LATEST NEWS
குஷியோ குஷி..! ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைந்தது.. ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் அதிரடி மாற்றம்..!!
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கையர் கட்டணமின்றி பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மகளிர் பயன்பாட்டிற்காக பெரும்பாலான அரசுப் புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகள் ‘சாதாரண கட்டண பேருந்துகளாக’ மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த அதிரடி மாற்றத்தின் காரணமாக, தானாகவே பேருந்து எந்திரங்களில் கட்டண விகிதம் குறைக்கப்பட்டு, பெண்களுடன் சேர்த்து ஆண் பயணிகளுக்கும் பயணக் கட்டணம் பெருமளவு குறைந்துள்ளது ஆண் பயணிகளிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, தென் மாவட்டங்களில் முக்கிய வழித்தடமான நெல்லை – திருச்செந்தூர் இடையே முன்பு ரூ.50 ஆக இருந்த பேருந்து கட்டணம் தற்போது ரூ.38 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, நெல்லை – தூத்துக்குடி வழித்தடத்தில் பல்வேறு தரப்பட்ட பேருந்துகளுக்கு ஏற்ப புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதில் இடைநில்லா எண்ட் டூ எண்ட் (End-to-End) பேருந்துகளில் ரூ.50, எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.40, மற்றும் சாதாரண கட்டண பேருந்துகளில் ரூ.35 எனப் பயணக் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள் மட்டுமின்றி, மத்திய மாவட்டங்களிலும் இந்த வழித்தடக் கட்டணக் குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. திருச்சி – துறையூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் கட்டணம் ரூ.40-ல் இருந்து ரூ.30 ஆகக் குறைந்துள்ளது. மகளிருக்கான ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தால் சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த மறைமுகக் கட்டணக் குறைப்பு சலுகை தினசரி பயணிக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து ஆண் பயணிகளுக்கும் பெரும் நிதி நன்மையை வழங்கியுள்ளது.
