LATEST NEWS
“ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கணுமா..? அமெரிக்காவுக்கு ஈரான் அதிபர் விதித்த தடாலடி நிபந்தனை… பதற்றத்தில் உலக நாடுகள்..!!”
மத்திய கிழக்கில் இருந்து உலக நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்ய முக்கிய கடல்வழிப் பாதையாகத் திகழும் ஹார்முஸ் ஜலசந்தியை, அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தன் கட்டுப்பாட்டில் வைத்து கப்பல் போக்குவரத்துக்குக் கெடுபிடி காட்டி வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வருகை தந்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் தேசிய ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவ மற்றும் பொருளாதாரத் தாக்குதல்களுக்குப் பதிலாகவே ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் எந்தவொரு அழுத்தத்திற்கும் ஈரான் பணிந்து போகாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சர்வதேச விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட்டு ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஈரான் தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார். ஆனால், அதற்கு முன்பாக அமெரிக்கா ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள், கடல்சார் முற்றுகை மற்றும் தொடர் அழுத்தங்களை உடனடியாகக் கைவிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார். மேலும், போரின் மூலம் ஈரானை அடக்க நினைத்த அமெரிக்காவின் இலக்குகள் தோற்றுவிட்டதால், தற்போது பொருளாதார மற்றும் கடல்சார் முற்றுகை என்ற மாற்று வழியை அமெரிக்கா கையில் எடுத்துள்ளதாக அவர் சாடியுள்ளார்.
பாரசீக வளைகுடாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் பெரும்பகுதி இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே பயணிக்கிறது. வளைகுடாவில் நிலவும் பதற்றமும் கப்பல்கள் மீதான தாக்குதல்களும் இந்திய வர்த்தகத்தையும், அப்பகுதியில் பயணிக்கும் பல்லாயிரக்கணக்கான இந்திய மாலுமிகளின் பாதுகாப்பையும் நேரடியாகப் பாதிக்கின்றன. இதன் காரணமாக, பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே ஈரான் அதிபருடன் பேசிய பிரதமர் மோடி, ஹார்முஸ் பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்தையும் மாலுமிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
