LATEST NEWS
மனிதநேயத்தின் உச்சம்..! 15 நிமிடத்தில் வந்த டெலிவரி பாய்… பைக்கைப் பார்த்ததும் ஷாக்கான கஸ்டமர்.. நெஞ்சைத் தொடும் பிளிங்கிட் ஊழியரின் செயல்..!!
முன்னதாக, மும்பையைச் சேர்ந்த ரோஷன் மத்ரே என்பவர் பிளிங்கிட் செயலியில் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். ஆர்டர் செய்த 15 நிமிடங்களில் டெலிவரி ஊழியர் அவரது வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஆனால், அந்த ஊழியருடன் அவரது இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய நாய்க்குட்டியும் அமர்ந்திருப்பதைக் கண்டு ரோஷன் மிகுந்த ஆச்சரியமடைந்தார். அதுகுறித்து டெலிவரி ஊழியரிடம் விசாரித்தபோதுதான் அதற்குப் பின்னால் இருந்த நெகிழ்ச்சியான பின்னணி தெரியவந்தது.
அந்த நாய்க்குட்டி காரின் சக்கரத்தின் கீழ் சிக்கி மிகக் கொடூரமான நிலையில் காயமடைந்திருந்தது. அதைக் கண்ட அப் பகுதி பிளிங்கிட் டெலிவரி ஊழியர்கள், அதனை அப்படியே விட்டுவிடாமல் மீட்டு, உரிய சிகிச்சை அளித்துப் பராமரித்து வந்துள்ளனர். தற்போது பூரண குணமடைந்துள்ள அந்த நாய்க்குட்டி, பிளிங்கிட் கிடங்கிலேயே தங்கி வாழ்கிறது. மேலும் ஊழியர்கள் டெலிவரிக்குச் செல்லும்போது அவர்களுடனேயே பைக்கில் சவாரி செய்து வருகிறது.
இந்த அழகான தருணத்தை புகைப்படத்துடன் ரோஷன் மத்ரே தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்தார். “இது மிகவும் மனதிற்கு நெகிழ்ச்சியாக உள்ளது” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் இதயங்களை வென்று வருகிறது. பலரும் அந்த டெலிவரி ஊழியர்களின் கருணையையும் மனிதநேயத்தையும் பாராட்டி வருகின்றனர்; சிலர் அந்த நாய்க்குட்டியை தத்தெடுக்கவும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
