LATEST NEWS
“அழகைக் கெடுத்த ஆபத்து..” புதிதாக வர்ணம் பூசிய மேம்பாலத்தில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்த பைக்குகள்..! வைரலாகும் பதைபதைக்க வைக்கும் ஷாக் வீடியோ..!!
துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு கொல்கத்தாவின் சிங்ரிகாட்டா மேம்பாலத்தில் அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு அழகுபடுத்தப்பட்டது. ஆனால், அக்டோபர் 14 அன்று இந்த மேம்பாலத்தில் பயணித்த மூன்று இருசக்கர வாகன ஓட்டிகள், வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் அடுத்தடுத்து சறுக்கி விழுந்தனர். பின்னால் வந்த ஒரு காரின் ‘டேஷ்கேம்’ கேமராவில் இந்த அதிர்ச்சி காட்சி பதிவாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சாலைகளில் பயன்படுத்தப்படும் வழுக்காத எதிர்ப்புத் திறன் கொண்ட ‘தெர்மோபிளாஸ்டிக்’ பூச்சுகளுக்குப் பதிலாக, எனாமல் அல்லது மென்மையான வண்ணச் சாயங்களைப் பயன்படுத்தியதே இந்த விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. வண்ணப் பூச்சு பூசப்பட்டதால் சாலையின் பிடிமானம் குறைந்து, வாகனங்கள் எளிதில் சறுக்கும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் லேசான மழை அல்லது ஈரப்பதம் பட்டால், இந்தப் பகுதி இன்னும் அதிக ஆபத்தானதாக மாறிவிடும் என வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியானது முதல், பொதுமக்கள் மற்றும் சமூக வலைதளப் பயனர்கள் நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேம்பாலத்தின் தூண்கள் மற்றும் கைப்பிடிச் சுவர்களுக்கு வண்ணம் பூசுவது பரவாயில்லை, ஆனால் வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையில் இது போன்ற சாயங்களைப் பூசியது மிகப்பெரிய அலட்சியம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். போக்குவரத்துப் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளாமல் அலங்காரத்திற்கு முன்னுரிமை அளித்த அதிகாரிகளின் செயல் குறித்துப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
