Uncategorized
திமுகவுக்கு விழுந்த பலத்த அடி..! “இளைஞர்களுக்கும் எளியவர்களுக்கும் மதிப்பில்லை” கோவை திமுக கவுன்சிலர் நண்பர்களுடன் கூண்டோடு ராஜினாமா..!
கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக கவுன்சிலரான பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். “திமுகவில் இளைஞர்களுக்கும் எளியவர்களுக்கும் இடமில்லை; எனவே இனியும் கட்சியில் தொடர்வதில் அர்த்தமில்லை” என்ற முடிவோடு தானும் தனது நண்பர்களும் திமுகவிலிருந்து விலகுவதாக அவர் தனது விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், திமுக தற்போது சாமானியர்களின் கட்சியாக இல்லாமல், ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறிவிட்டதாகவும் அவர் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கட்சியில் சாமானியன் ஒருவன் வெறும் வாக்காளனாகவோ அல்லது அடிமட்டத் தொண்டனாகவோ மட்டுமே இருக்க முடியும் என்றும், உண்மையான மக்கள் தொண்டாற்றுகிற பொறுப்புக்கோ அல்லது உயர் பதவிக்கோ வர முடியாது என்கிற அளவிற்குத் தலைமையும் கட்சியும் எட்டாத உயரத்தில் இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார். தற்போதும் கூட எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலினும், மூத்த தலைவர்கள் அவர் பின்னாலும் நிற்பது எப்படி சமூக நீதியாகும் என்று கேள்வி எழுப்பியுள்ள பாபு, மன்னர் ஆதிக்கமாகவும் முதலாளித்துவ கட்சியாகவும் திமுக மாறிப்போனதற்கு இதுவே மிகச்சிறந்த அடையாளம் என்றும் சாடியுள்ளார்.
